திமிர்

பெண்மையக் கதைகள்
4.8 out of 5 (17 )

அந்த குளிரூட்டப்பட்ட அறையில் நிறுவனத்தின் முக்கியமான நிலையில் உள்ள அனைத்து நபர்களும் அமர்ந்திருந்தனர். அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் காதம்பரி அக்கூட்டத்திற்கு அஏற்பாடு செய்திருந்தாள். இன்று தான் அவளுக்கு முதல் நாள் அந்த நிறுவனத்தில்.

ஆங்காங்கே அவர்கள் அருகில் அமர்ந்திருந்தவர்களுடன் சிறு சிறு பேச்சுகள் அந்த அமைதியை நிலை குலைத்தது. திடீரென்று கதவு திறக்கப்பட அனைவரது பார்வையும் அந்த திறந்திருந்த கதவின் வழியாக உள்ளே நுழைந்தவளை அளவிட்டது.

கண்களில் கருப்பு நிற கண்ணாடியும் பெண்கள் உடுத்தும் சட்டையும் கால் சராயும் அணிந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். அவளது நீள குதி கொண்ட காலணியில் இருந்து எழுந்த அந்த சப்தம் அந்த அறையை நிறைத்தது.

அங்கிருந்த ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு பாவனைகள். ஒரு சிலரின் பார்வை ஆச்சர்யத்தையும், ஒரு சிலரது பொறாமையையும், ஒர் சிலரது பெண்ணா என்ற ஒரு அலட்சியத்தையும் கொண்டிருந்தது.

அது ஒரு கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனம். அந்த நிறுவனம் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. விஸ்வநாதன் என்பவர் தான் முதலாளி. கடந்த ஆறு மாதங்களாக ஒரு விபத்து ஏற்பட்டு உடல் நல குறைவினால் படுத்த படுக்கையாக இருந்தார்.

அதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் அனைத்து சரிந்தது. அத்தோடு நிறுவனத்தில் உற்பத்தி திறன் பாதிப்பு, தொழிலாளர்கள் பிரச்சனை, உதிரி பாகங்களின் தரமின்மை என்று ஏகப்பட்ட புகார்கள் வந்து கொண்டிருந்தன. எல்லாம் தெரிந்தும் தனது உடல்நலன் இருக்கும் தற்போதைய நிலையில் ஏதும் செய்ய முடியாத ஒரு கையறு நிலையில் இருந்தார் அவர்.

திருமணம் ஆகாதவர் வாரிசு என்று எவருமில்லை என்ற நிலையில் தான் தான் அடுத்த நிறுவனத்தின் தலைவர் என்று அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் நினைப்பு இருந்தது. அவர்களின் ஆசையில் எல்லாம் மண்ணைப் போட்டது போல் ஒருத்தி வந்தாள் என்றால் யார் தான் கோபமும் பொறாமையும் கொள்ளாமல் இருப்பார்கள். குள்ள நரி கூட்டத்தில் ஏதோ ஒரு சில நல்லவர்களும் இருந்தார்கள் என்றால் அது மிகையில்லை.

ஆனால் அந்த பெண்ணிற்கோ அவர்களின் பார்வையை பற்றி எந்த விதமான கவலையும் இன்றி பாரதி கண்ட புதுமை பெண்ணாக நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் என்ற மகாகவியின் பாடலுக்கு இணங்க அங்கே அவர்களின் முன்னே வந்து நின்றாள். அவளது பின்னேயே அவளின் செயலாளர் மது வந்து நின்றாள்.

“ஹாய் எவ்ரிபடி, ஐ அம் ஜனனி சிஇஒ ஆஃப் திஸ் கம்பெனி..”

அவளுக்கு அருகில் இருந்த அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் சண்முகம் எழுந்து அருகில் வந்து கையில் இருந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டி “வெல்கம் மேடம்..” என்றார் தனது வாயில் உள்ள அனைத்து பற்களும் தெரியும் படி.

அவரது பார்வையின் அர்த்தத்தையும் சிரிப்பின் பின்னே இருந்த நோக்கத்தையும் அறிந்தவள் அவரை மேலிருந்து கீழாக பார்த்து கொண்டே “எனக்கு இந்த பார்மாலிட்டீஸெல்லாம் பிடிக்காது.. அண்ட் மோர் ஓவர் எனக்கு டைம் வேஸ்ட் பண்றது சுத்தமா பிடிக்காது. இந்த ஆறு மாசத்துல கம்பெனியில ஒவ்வொரு டிபார்ட்மென்ட்லையும் நடந்த எல்லா விஷயங்களும் என்னொட டேபிளுக்கு வந்தாகணும் அதுவும் அந்த டிபார்ட்மென்ட் ஹெட் கொண்டு வந்து கொடுக்கனும்..” என்றவள் விறுவிறுவென்று தனது அறை நோக்கி சென்றாள்.

அவள் கட்டளையிட்டு சென்றவுடன் அங்கிருந்த அனைவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

அங்கிருந்த அனைவரும் ஒவ்வொரு துறைக்கும் தலைமை பொறுப்பை வகிப்பவர்கள். அவர்களை பார்த்த சண்முகம் “என்ன ஒருத்தரியயொறுத்தர் பார்த்துட்டு இருக்கீங்க.. அவங்க சொன்னதெல்லாம் சீக்கிரம் கொண்டு வாங்க குயிக்..” என்றான். அனைவரும் அவரது பேச்சிற்கிணங்க களைந்து சென்றனர்.

சண்முகத்தின் அருகே வந்த அவனது உதவியாளர் “என்ன சார் இது வந்த முத நாளே இந்த பொண்ணு இப்படி பேசுது.. ரொம்ப திமிர் பிடிச்சவளா இருப்பா போல இருக்கே… நீங்க தான் அடுத்த சீஇஒனு நினைச்சா எங்கிருந்தோ வந்த ஒருத்தி இப்படி பேசிட்டு போறா.. அவள சும்மா விட கூடாது சார்…” என்றான்.

“இப்ப தானே உள்ள வந்திருக்கா… பார்க்கலாம் முதல் நாள் எல்லாம் இப்படி தான் இருப்பாங்க.. அவளுக்குனு வீக் பாய்ண்ட் இல்லாமயா இருக்கும் பொண்ணு வேற எதுக்காவது மயங்காமயா இருப்பா… பார்த்துக்கலாம் விடு…”

அடுத்தடுத்து வந்த நாட்களிலெல்லாம் ஒவ்வொரு துறை தலைவருக்கும் ஒரு பெறும் சவாலான நாளாக இருந்தது. முதலில் நிர்வாகத்துறையில் உள்ள சீர்கேடுகளை களைய முற்பட்டாள். சிறு சிறு தவறு செய்தவர்களுக்கு கூட கடும் தண்டனை கொடுத்தாள்.

இந்த நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே வேறு நிறுவனத்திற்கு விலை போனவர்களை எல்லாம் கூண்டோடு வேலையை விட்டு தூக்கினாள். ஒரு வாரத்தில் இவளின் அதிரடி நடவடிக்கைகளை கண்டு மொத்த நிறுவனமும் நடுங்கியது.

இதன் பிரதிபலிப்பு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களிடம் தெரிந்தது. விஸ்வநாதன் எப்பொழுதும் அடிமட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனில் அக்கறையுள்ளவர். அங்கு வேலை செய்பவர்களுக்கு மற்ற நிறுவனத்தை விட சம்பளமும் அதிகம் அதுமட்டுமில்லாமல் அனைவருக்கும் நிறுவனம் வருவதற்கான போக்குவரத்து வசதி, தரமான இலவச உணவு என்று அனைத்தையும் செய்து கொடுத்தார்.

இதை எல்லாம் அவர்கள் இழக்க தயாராக இல்லை அதனால் எங்கே வேலையை விட்டு தூக்கி விடுவார்களோ என்று நினைத்து கொண்டு அவர்கள் ஒழுங்காக தங்களது வேலையை செய்தனர். இதை அறிந்த ஜனனி நிம்மதி அடைந்தாள்.

அவள் முன்னே எல்லோரும் அடங்கி போவது போல் இருப்பவர்கள் பின்னே ராங்கி காரி, திமிர் பிடித்தவள் என்று பேச ஆரம்பித்தார்கள். அதை எல்லாம் அவள் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை.

“டேய் ராஜேஷ் இந்த ஜனனிக்கு ரொம்ப திமிர் அதிகம் டா… நானும் பொண்ணு தானே போக போக ஏதாவது சொல்லி மயக்கிடளாம்னு பார்த்த அவ எதுக்குமே மசிய மாட்டேங்குறா??? என்ன பண்றது???” என்று தாடையை தடவிய படி யோசித்து கொண்டே தனது எடுபிடியிடம் பேசி கொண்டிருந்தார் சண்முகம்.

“என்ன சார் நீங்க… அந்த பொண்ண பத்தி அரசல் புரசலா கேள்விப்பட்டேன். புருஷன விட்டு பிரிஞ்சு வந்துட்டாளாமா… அதோட நம்ம எம்டிக்கு எப்படி பழக்கம்னு வேற தெரியல..”

“ஏய் என்ன நம்ம எம்டிய பத்தி தப்பா பேசுற… அவர் எப்பேற்பட்ட ஜென்யூன் தெரியுமா???”

“சார் பொண்ணுங்களோட வீக்பாயிண்ட்ல இதுவும் ஒன்னு… அவங்கள பத்தி தப்பா எல்லாரும் பேசற மாதிரி ஒரு ரூமர் கெளப்பி விட்டா அவ்ளோ தான்..”

“ஆனா நம்ம தான் இதுக்கெல்லாம் காரணம்னு தெரிய கூடாது.”

“அதெல்லாம் தெரியாமா பார்த்துக்கலாம் சார்”

“என்னமோ பண்ணு… ஆனா அவ இந்த ஆஃபிஸ்ஸ விட்டு போகணும்” என்று கூறியவர்களின் மனதில் வன்மை தாண்டவமாடியது. ஆனால் அவள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவள் என்பது அந்த சிறு புத்தி உள்ள மனிதர்களுக்கு தெரியவில்லை.

மறுநாள் அவள் அலுவலகத்தில் நுழைந்த பொழுது அவள் மீதுள்ள பயத்தில் அனைவரும் மரியாதை கொடுத்தனர் என்றாலும் அதையும் மீறி ஏதோவொன்று அவர்களது கண்களில் தெரிந்தது. அதை தெரிந்து கொண்டாலும் அதை பற்றி அலசி ஆராய அவள் முனையவில்லை.

வழக்கம் போல் வேலையில் புயல் போல் செயல்பட்டாள்.

அவள் அந்த நிறுவனத்தின் முழு பொறுப்பை ஏற்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகி விட்டது.

உற்பத்தி பிரிவினை மேற்பார்வையிட வந்திருந்தாள். அங்கே இரு தொழிலாளர்களின் கைகள் வேலை செய்து கொண்டிருந்தாலும் வாய் பேச்சுக்கு குறைவில்லாமல் இருந்தது.

“டேய் உனக்கொரு விஷயம் தெரியுமா.. இப்ப நம்ம புதுசா முதலாளி ஸ்தானத்துல இருக்குதே ஒரு பொண்ணு அதுக்கு ஏற்கனவே கல்யாணமாகி புருஷன விட்டு பிரிஞ்சு வந்துடுச்சாம். அதோட நம்ம முதலாளிக்கும் அந்த பொண்ணுக்கும் ஏதோ தப்பான உறவு இருக்கும்னு எல்லாரும் பேசிக்கறாங்க. திடிர்னு யாருனே தெரியாத ஒரு பொண்ணு எம்டி போல இருக்க முடியுமா… ஏதோ ஒன்னு நடந்திருக்கு..”

“அப்படியா… எனக்கு அப்பவே தெரியும் அந்த பொண்ணு ரொம்ப திமிரா தான் எல்லா இடத்துலயும் நடந்துட்டு இருக்கு.. ஆம்பளனு யாருக்கும் மரியாதை கொடுக்கறது இல்ல. சில சமயம் வேலை பார்க்கறவங்கள கை நீட்டி அடிச்சு கூட இருக்குதாமா.. எல்லாம் நானும் கேள்வி பட்டேன். அவ புருஷனும் ரொம்ப நல்லவன் போல.. இந்த பொண்ணு தான் வேணும்னே அவன விட்டுட்டு வந்து இப்ப நம்ம எம்டி கூட இருக்கும் போல.. பெரிய இடம்னா எல்லாம் இருக்கும் போல.. எல்லாம் நம்ம கண்டுக்காம போயிடனும்.” என்று பேசிக் கொண்டிருந்தவனின் பார்வை இதை எல்லாம் பின்னால் நின்று கேட்டு கொண்டிருந்த ஜனனியின் மேல் விழுந்தது. அவளது பார்வையில் கோபமோ, வருத்தமோ எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் வெறுமையாக இருந்தது.

அதை பார்த்தவனின் கண்களில் எங்கே வேலையை விட்டு வெளியாக்கி விடுவார்களோ என்ற பயம் தெள்ளத்தெளிவாக தெரிந்தது. ஆனால் ஜனனியோ அவர்களை வெற்றுப்பார்வை ஒன்று பார்த்து விட்டு கடந்து விட்டாள்.

அவளின் பின்னால் வந்த அவளின் உதவியாளர் மது “வேலைக்கு வந்தீங்கனா அத மட்டும் பாருங்க தேவை இல்லாதத எல்லாம் பேசிகிட்டு இருக்காதீங்க.. மேடம் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு.. யாரோ எதுவோ தேவையில்லாம ஒரு வதந்திய கிளப்பி விட்டாங்கனா அதையவே பத்தி பேசிட்டு இருப்பீங்களா.. உங்களை எல்லாம்… உண்மை தெரியாம எதையும் பேசாதீங்க.. இந்நேரம் நீங்க பேசுன பேச்சுக்கு அவங்க உங்கள வேலைய விட்டு தூக்கிருப்பாங்க. அவங்க வந்த இந்த ஆறு மாசத்துல எந்த விதத்துலயாவது உங்களுக்கு குறை வச்சுருக்காங்கலா.. இல்லையல்ல கம்பெனி எவ்ளோ நஷ்டத்துல போனாலும் உங்க வீட்ல அடுப்பு எரிஞ்சுட்டு தானே இருக்கு.. இதை எல்லாம் மனசுல வச்சு பாருங்க… எந்த உண்மையும் தெரியாம பேசாதீங்க.. வேலைய பாருங்க போங்க..” என்றவள் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருந்தாள்.

காரில் சென்று கொண்டிருந்த ஜனனியின் மனதினை மதுவினால் அறிய முடியவில்லை. அவளுக்கும் அலுவலகத்தினுள் இந்த மாதிரி வதந்திகள் பரவுவது தெரியும் ஆனால் அவளால் அதை உண்மை என்று நம்ப முடியவில்லை. இந்த ஆறு மாதங்களாக அவளும் பார்த்து கொண்டு தானே இருக்கின்றாள் அவளது நடவடிக்கைகளை. வேலையில் சிறு தவறு நடந்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டாளே தவிர யாரிடமும் அனாவசியமான பேச்சோ சிரிப்போ இருக்காது. எப்பொழுதும் அவளை சுற்றி ஒரு வட்டம் போட்டு கொண்டு யாரையும் அதனுள்ளே அனுமதிக்காதவள்.

என்ன தான் யாருடைய பேச்சையும் உள்வாங்கி கொள்ளவில்லை என்றாலும் அவளுடைய காதுகளில் ஒலித்தது என்னவோ திமிர் பிடித்தவள் என்கிற வார்த்தை தான்.

“ஏய்.. என்ன விட ரொம்ப படிச்சுட்டேங்கற திமிரா?? எனக்கே புத்தி சொல்ற? உன்னைய எந்த வேலைக்கும் அனுப்பாம வீட்ல வச்சுருக்கும் போதே உனக்கு இவ்ளோ திமிர். வேலைக்கு போய் கைல காசு பணம் புரள ஆரம்பிச்சா என்னவெல்லாம் பேசுவ..” என்றான் அவளது கணவன் ஆனந்த்.

“அதுக்கு தான்டா சொன்னே இவ வேணாம்னு அன்னைக்கே படிச்சு படிச்சு சொன்னேன். நீ எங்கே கேட்ட?? வெள்ள தோலுக்கு ஆசப்பட்டு இவள கல்யாணம் பண்ணிட்ட..” என்று அவனது அம்மா அவனின் செயலுக்கு பின் தாளம் போட்டு கொண்டிருந்தாள்.

“அத்தை இது எங்க ரெண்டு பேருக்கும் இடையில நடக்கற பிரச்சனை. விஷயம் என்னனு தெரியாம நீங்க உள்ள வராதீங்க..” என்றாள் ஜனனி தனது மாமியார் கஸ்தூரியை பார்த்து..

“பார்த்தியாடா என்ன பேசறானு.. நான் இந்த வீட்ல பெரியமனுசி நான் கேட்காம இங்க யாரு கேட்பாங்க?? என்ன கொழுப்பு இருந்தா இவ இப்படி பேசுவா..”

மாமியாரின் பேச்சை புறந்தள்ளியவள் “இங்க பாருங்க நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன் அன்னைக்கே அந்த சிட் கம்பெனியில சேர வேண்டாம்னு சொன்னேன் கேட்டீங்களா… அப்ப நான் சொல்றத கேட்காம விட்டுட்டு இப்ப அவன் ஏமாத்திட்டு போன பின்னாடி வந்து என்கிட்ட சண்டைக்கு நின்னுகிட்டு இருக்கீங்க..” என்றாள் தனது கணவன் ஆனந்திடம்.

ஆனந்திற்கும் ஜனனிக்கும் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒர் ஆண்டு ஆகின்றது. அவர்களுடைய குடும்பம் நடுத்தர வர்க்கம் தான். அவன் கல்லூரி படிப்பு முடிக்கும் பொழுதே அவனது தந்தை இறந்து விட்டார். இவன் தான் தலை மகனாக பொறுப்புள்ளவனாக இருந்து வேலைக்கு சென்று தங்கைக்கு திருமணம் முடித்த தகப்பன் ஸ்தானத்தில் நின்றவன். எந்த கெட்டபழக்கமும் இல்லாதவன். ஆனாலும் அவனிடம் காணப்பட்ட மிகப்பெரிய குறை அவனது வாழ்க்கையை ஆட்டுவித்தது.

அவனுக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க என்று வந்த பொழுது பெண் படித்தவளாகவும், அழகுள்ளவளாகவும் அதே சமயம் தனக்கு கீழ்படிந்தவளாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

ஜனனியை பார்த்த உடனே அவனுக்கு பிடித்து விட்டது. அவள் அப்பொழுது தான் முதுகலை வணிக மேலாண்மை படித்து முடித்திருந்தாள். வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது ஆனாலும் பெற்றோர்களின் ஆசைக்கிணங்கவும் தனக்கு கீழ் இன்னொரு தங்கை இருப்பதையும் கருத்தில் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தாள்.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல் இருந்தது ஆனந்தின் நடவடிக்கைகள். அவன் நடவடிக்கைகளில் கஸ்தூரி எங்கே தனது மகன் தன்னை விட்டு போய்விடுவானோ மனைவி ஏதாவது தவறாக கூறி அதை கேட்டு தன்னை விட்டை விட்டு அனுப்பி விடுவானோ என்றெல்லாம் தவறான எண்ணங்களில் இருந்தார். அதன் விளைவு ஜனனியை கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பித்தார்.

ஜனனி மிகவும் புத்திசாலி. ஏதாவது ஒரு சில நேரங்களில் அவன் தடை பட்டு நிற்கும் பொழுது அவனுக்கு அறிவுரை கூறுவாள். அது வெற்றியும் அடையும். அவனுக்கு ஒரு புறம் சந்தோஷம் அளித்தாலும் மறுபுறம் தன்னை விட புத்திசாலியாக இருக்கிறாளே எங்கே தன்னை மதிக்காமல் இருந்து விடுவாளோ என்ற எண்ணமும் மேலோங்கி இருந்தது. இதற்கு காரணம் அவனுக்குள்ளே இருந்த தாழ்வு மனப்பான்மை. சிறு வயதிலிருந்தே இருந்தது அவன் வளர வளர அதுவும் வளர்ந்து கொண்டே வந்தது என்றே சொல்லலாம்.

ஜனனிக்கு அவனின் தாழ்வு மனப்பான்மை புரிந்திருந்தாலும் அதிலிருந்து அவனை எப்படி மீட்டெடுப்பது என்ற எண்ணமும் இருந்தது.

அப்பொழுது தான் ஒரு நாள் நண்பன் ஒருவன் சீட்டு சேர்ந்து இருப்பதாகவும் தன்னையும் சேர சொல்லி கூறியதால் மாதம் ஒரு பெரும் தொகையை அதில் போட இருப்பதாகவும் இரண்டு வருடம் முடிந்து ஒன்றுக்கு இரண்டாக நமக்கு பணம் கிடைக்கும் என்று கூறினான். அதை அப்பொழுதே அவள் எதிர்த்தாள்.

“இங்க பாருங்க மாசம் நீங்க சம்பாதிக்கறதுல பாதிய சீட்டுக்கு கட்டிட்டா இங்க எப்படி குடும்பம் நடத்தறது. மாசம் பொறந்தா கரண்ட் பில்லு, கேஸ், மளிகை சாமான் அதோட வீட்டுக்கு வாங்குன சோஃபா, அது இதுனு மாசமாசம் கடன் அடைக்கவே கரெக்டா இருக்கு.. இப்ப புதுசா சீட் போட்டா நான் என்ன பண்றது”.

“இங்க பாருடி எனக்கு எல்லாம் தெரியும் எல்லாம் யோசிச்சு தான் பண்றேன் நீ என்னமோ இந்த குடும்பத்தை ஏத்து நடத்தற மாதிரி சொல்ற.. அப்பா இறந்ததுக்கப்புறம் ஒத்த ஆளா இருந்து என் தங்கைக்கு கல்யாணம் செஞ்சு இப்ப உன்னையும் கல்யாணம் பண்ணி இருக்கேன் எனக்கு தெரியாதா எத எப்ப செய்யனும்னு.. உன் வேலையை பார்த்துட்டு போ.. உன் படிச்ச திமிரெல்லாம் இங்க காட்டாத” என்று கூறி கோபமாக அன்று எழுந்து சென்ற ஆனந்த் இன்று அதை நினைத்து பார்த்தான்.

அவன் மீது குற்றம் இருந்தாலும் அவனுடைய தாழ்வு மனப்பான்மை அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இது எல்லாம் சேர்ந்து அவளிடம் திரும்பியது கோபமாக. அதற்கு தூபம் போட்டு விட்டார் அவனது அம்மா.

“ஏய் நீ அந்த விஷயம் தொடங்கும் போதே அபஷகுணம் மாதிரி சொன்னேயே அதான் இப்ப எல்லாம் முடிஞ்சு போய் நிக்குது. எல்லாத்துக்கும் காரணம் நீ தான்”.

“நான் என்ன தப்பு செஞ்சேன் நீங்க ஏமாறதுக்கு முன்னாடியே உங்கள எச்சரிக்கை செஞ்சது குத்தமா..”

“ஆமாடி குத்தம் தான்.. ரொம்ப திமிரா ஆடாதடி..”

“சும்மா சும்மா திமிர் திமிர்னு சொல்லாதீங்க..”

“ஆமாடி அப்படி தான் சொல்லுவேன் என்ன விட அதிகம் படிச்சிருக்கேனு திமிரு உனக்கு..”

“இப்படி ஈகோ பார்க்கிறவர் எதுக்கு உங்கள விட அதிகமா படிச்ச என்னைய கல்யாணம் செஞ்சுகிட்டீங்க..”

“அதாண்டி நான் செஞ்ச தப்பு.. என்ன தான் படிச்சிருந்தாலும் எங்கள விட உங்க குடும்பம் வசதி கம்மினு கல்யாணம் செய்தேன் பாரு என்ன சொல்லனும்”

“என்ன வசதி குறைவா இருந்தா உங்களுக்கு அடங்கி இருப்பேனு பார்த்தீங்களா.. அதெல்லாம் என் கிட்ட நடக்காது..”

அவர்களின் பேச்சு ஓர் எல்லைக்கு மேல் மீறிக்கொண்டே போனது. இறுதியில் “வீட்டை விட்டு வெளியே போடி” என்ற ஆனந்தின் பேச்சில் நின்றது. அவள் இதை நினைத்து பார்க்கவில்லை.

அவள் ஒன்றும் பெண்ணியவாதி அல்ல. கணவனை மதிப்பவள் தான் ஆனால் அதற்காக அவனுக்கொன்றும் அடிமை சாசனம் எழுதி வைத்து அவனது காலடியில் இருப்பவளும் அல்லவே. கணவனிடத்திலும் சுயமரியாதையை எதிர்பார்ப்பவள் அல்லவா.. அப்படிப்பட்டவளின் சுயமரியாதையை சீண்டி பார்த்துவிட்டான் அவளது கணவன்.

அங்கிருந்து வெளியேறியவள் சென்றது தாய் தந்தையரை நாடி.

“இப்ப என்ன நடந்துச்சுனு மாப்பிள்ளைட்ட சண்ட போட்டுட்டு இங்க வந்து நிக்குற.. இப்ப தான் உன் தங்கைக்கு கல்யாண ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கோம் அதுக்குள்ள நீ இங்க வந்து நின்னா வர்ற மாப்பிள்ளை என்ன நினைப்பான்.. அவளுக்கு கல்யாணம் முடியற வரைக்குமாவது கொஞ்சம் அடக்க ஒடுக்கமா அங்க இரு.. எனக்கென்னமோ அவர் மேல தப்பு இருக்காதுனு தோணுது. நீ தான் ஏதாவது மேதாவி தனமா பேசறதா நினைச்சு ஏதாவது சண்டைய இழுத்து வச்சுருப்ப..”

பெற்றவர்களே தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் வெளியேறியவள் கால் போகின்ற பாதையில் சென்றபொழுது பார்த்தது ஒரு விபத்து நடந்த காரினை தான். அங்கே கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து கொண்டிருந்தார் விஸ்வநாதன்.

ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் அடுத்து என்ன என்று நினைத்தது ஒரு நிமிடம் தான் உடனே அவரது போனை எடுத்து ஆம்புலன்சிற்கு அழைத்து ஒரு மணி நேரத்தில் அவரை மருத்துவமனையில் சேர்த்தாள். விஸ்வநாதன் இருந்த காரில் அவர் தன்னுடன் பெரும் தொகையை வைத்து இருந்தார். அதில் இருந்து தான் அவரின் மருத்துவ செலவுக்கும் பணம் எடுத்தாள். முழுதாக ஒரு நாளைக்கு பிறகே அவர் கண்விழித்து ஜனனியை பற்றி தெரிந்து கொண்டார்.

தனக்கென்று யாருமில்லை தன்னுடனேயே தனக்கு மகளாக இருக்க வேண்டினார். முதலில் மறுத்தவள் பின்பு அவருடனேயே இருந்து கொண்டாள். நாட்கள் செல்ல செல்ல அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தாலும் அதிகப்படியான ஓய்வு தேவை என்று மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அவளை அலுவலகத்தில் தனக்கு அடுத்தபடியாக அவளை நிர்வாக பொறுப்பேற்க கூறினார். பணத்தின் மேல் பற்றில்லாத தன்மை, அவளிடம் இருந்த தன்னம்பிக்கை, குற்றத்தை அஞ்சாமல் தட்டி கேட்கும் துணிவு இதை கொண்டே அவளை அப்பதவியில் அமர்த்தினார்.

ஒரு பெண் அஞ்சவில்லை துணிவுடன் இருக்கிறாள் என்றால் அவளை அடக்கி ஆள்வதற்கு தான் இம்மாதிரியான பேச்சுக்களா… நிமிர்ந்து நின்றால் அதற்கு பெயர் திமிர் என்றால் ஆமாம் நான் திமிர் பிடித்தவள் தான். யாரென்றே தெரியாத ஒருத்தருக்கு என்னுடைய நடத்தையையும், நான் நல்லவள் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீ என்னவோ பேசிக்கொள் நான் இப்படி தான் என்று மறுபடியும் நிமிர்ந்து அடுத்த வேலையை கவனிக்க மனதினை நிலைப்படுத்தி கொண்டாள் பெண்ணவள்.

அதே சமயம் அலுவலகத்தில் தன் முன்னே இருந்த கணிணி திரையினை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் ஆனந்த்.

“என்ன ஆனந்த் அக்கவுன்ட்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கா இன்னொரு டைம் மறுபடியும் செக் பண்ணிடுங்க இல்லனா மேடம்கிட்ட நான் பேச்சு வாங்க முடியாது.. ஆனாலும் இந்த சின்ன வயசுலயே ஒரு பெரிய கம்பெனியை நிர்வகிக்கற பொறுப்புனா சும்மாவா… நல்லா திறமையானவங்களா இருக்காங்க..” என்றான் அவனது மேலதிகாரி.

“ஆமா சார்..” என்றவன் அன்று திமிர் திமிர் என்று அவளை திட்டியதை எண்ணி இன்று வெட்கப்பட்டு கொண்டான். அவன் வேலை செய்யும் அலுவலகத்தின் முதலாளியாக இருந்து அனைவரையும் ஆட்டி படைத்து கொண்டிருக்கும் அவளை தொலைத்து விட்டோமே என்று வருத்தப்பட்டு கொண்டான்.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...